ஜெ.விடம் பணம் பெற்றோனா…? : 1996ல் வைகோ அளித்த பேட்டி

Must read

வரலாறு முக்கியம் அமைச்சரே…
(கடந்த 1996ல் “ஏவுகணை” இதழில் வெளியான வைகோவின் பேட்டி, தொடர்ச்சி..)

ஜெ., வைகோ
ஜெ., வைகோ

ஜெயலலிதாவிடம் பணம் பெற்றுக் கொண்டு கட்சியை உடைத்ததாக கூட, கருணாநிதி உங்கள்  மீது குற்றம் சுமத்தினாரே…?
என்னை கட்சியை விட்டு நீக்கிய கலைஞர், எந்தவிதத்திலாவது என்னை ஒழிக்க வேண்டுமென நினைத்தார். “ஜெயலலிதாவிடம் காசு வாங்கிக் கொண்டு,கட்சியை உடைத்தார்’’ என்று  பச்சைப் பொய்யை  – அபாண்டமான பொய்யை, கோயபல்ஸ் பாணியில் பிரச்சாரமாக்கினார். அதற்கு சில பத்திரிகைகளும் துணை போயின.
இருந்தாலும்,முதல்வராக இருந்தவர், கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்பதனால், அவர் சொல்லி வந்த பொய்யை செய்தியாகப் போடும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் அது பொய்யென்பதை, மக்கள் இன்று உணர்ந்திருக்கிறார்கள்; காலம் நிரூபித்திருக்கிறது. எனவே, அவர்  இந்தமாதிரியான தந்திரத்தை கையாண்டு, என்மீது பல  குற்றசாட்டுகளை வைத்தபோது கூட, நான் அவர் மீது கடுமையான குற்றச்  சாட்டுக்களைச் சொல்லவில்லை.
என்னுடைய கூட்டங்களில்,மணிக்கணக்கான எனது நீண்ட பேச்சில், அவரைப் பற்றி இரண்டு அல்லது மூன்று நிமிடங்களே பேசினால்கூட, ’’வைகொ என்னைப் பற்றித்தான் குமுறுகிறார். ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றி பேசவில்லை’’ என, கூறுகிறார் கலைஞர். 1200 கிலோ மீட்டர் நடந்து. பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில் பேசினேன். முழுக்க முழுக்க ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்துதான் அந்தப் பயணம் நடந்தது.
கூட்டங்களில் அதிமுக. ஆட்சியின் அவலங்களை விரிவாகப் பேசினோம். ஜெயலலிதா ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்  எனறு நாங்கள் தான் முதன் முதலாக  வலியுறுத்தினோம். திருச்சி மாநாட்டில் கூட, 2 மணிநேரம் 20 நிமிடம் பேசியதில், மூன்று நிமிடம் தான், கலைஞரைப் பற்றி பேசி இருகிறேன். ஆனால், திருச்சி மாநாட்டுக்குப் பிறகு நடந்த  நிருபர் கூட்டத்தில்,  “என்னைப் பற்றித்தான் வைகோ, அதிகம் பேசினார்,’ என வருத்தப்பட்டிக்கிறார், கலைஞர்.
கவியரசர் கண்ணதாசன் சொன்னது போல, இழவு வீட்டிலும் கலைஞர் தான் கதாநாயகன் – கல்யாணவீட்டிலும் கலைஞர் தான் கதாநாயகன். இதற்குமேல்  நான் சொல்ல விரும்பவில்லை.
 
கருணாநிதி
கருணாநிதி

காங்கிரஸ் எதிர்ப்புணர்வை 1967 ல்  ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கி, அண்ணா தனது கட்சிக்கு சாதகமாக்கி வெற்றி கண்டார். 1977-ல் கருணாநிதி எதிர்ப்புணர்வை மிகச் சரியாக கையாண்டு, எம்.ஜிஆர். வெற்றி கண்டார். 1996-ல் ஜெயலலிதா எதிர்ப்புணர்வை ரஜினி, மூப்பனாரோடு சேர்ந்து  கருணாநிதி சாதகமாக்கி  வெற்றி கண்டுள்ளார். கருணாநிதி எதிர்ப்புணர்வை  மக்களிடையே இன்றும் அப்படியே நீடிப்பதாகவே கருதுகிறோம். இந்தச் சூழ்நிலையை, சாதகப்படுத்திக் கொள்ள ஜெயலலிதா, மூப்பனார், வாழப்பாடியார் உட்பட பலரும் முயற்சிப்பார்கள். நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? அதற்கான திட்டம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?
[கொஞ்சநேரம் சிந்தித்து விட்டு] மிகவும் ஆழமான கேள்வி. இதற்கு விரிவாகவே பதில் சொல்கிறேன்.  நீங்கள் குறிப்பிட்ட கடந்த முப்பதாண்டுக்கால அரசியல் நிலவரம் சரிதான். தமிழக மக்களிடையே திமுக  எதிர்ப்புணர்வு என்பதைவிட, கலைஞர் எதிப்புணர்வுதான் மேல்லோங்கிப் பதிந்துள்ளது. அதற்கு காரணம், ரொம்பவும் வெளிப்படையானது. ’கழகம் ஒரே ஒரு குடும்பம்’ என்று நினைத்து செயல்படுபவர் கலைஞர். லட்சோப லட்சம் தொண்டர்களின் இரத்ததில், வியர்வையில் உருவான இந்த இயக்கத்தை, சொந்தலாபங்களுக்காக  தன்னிஷ்டம்போல் இயக்கி வருகிறார்.
இப்போது கூட திமுக கழகம் ஆதரவு ஓட்டுப் பெற்று  ஆட்சிக்கு வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களால் வெகுண்டெழுந்த மக்கள், ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்களித்தனர். திமுக ஆட்சியமைத்து இது தான் நடந்தது.
கலைஞர் மீதுள்ள வெறுப்பு, திமுக  எதிர்ப்பாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை, இப்போதுள்ள சூழ்நிலையை கூர்ந்து கவனித்து, மிகவும் கவனமாக திட்ட மிட்டு, செயல் படுகிறோம்.
மறுமலர்சி திமுக தான் உண்மை திராவிட முன்னேற்ற கழகம் –உண்மையான திராவிட இயக்கம். என்று நிரூபிக்கிற  நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
இப்போதைய கலைஞர் ஆட்சியில்,  முந்திய ஆட்சியின் அத்தனை  மோசமான செயல்பாடுகளும் தொடர்கின்றன. சட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட  அதிகார மையம் ஒன்று அவரது குடும்பத்தில் உருவாகியுள்ளது.  இந்த மையம் தான் கட்சியையும், ஆட்சியையும் ஆட்டிப் படைக்கிறது.  இதை முன்னமேயே குறிப்பிட்டுள்ளேன்.
ஆக கலைஞரின் ஆட்சியில் எல்லாத் தவறுகளும் நடநதபடியேதான் இருக்கும். எதிரான கருத்துக் கொண்டவர்களை,ஒடுக்குவது, ஏற்றுக் கொண்ட கொள்கையை படஹ்வியை முன்னிட்டு கைவிடுவது,மாநில நலன்களை மறப்பது, இப்படி எல்லாமே தொடர்கின்றன.  கலைஞரின் குடும்ப ஆட்சியின் அவலங்களை நாங்கள்முறையாக எடுத்துச் சொல்லி வருகிறோம். அதில் எங்கள் கட்சி வெற்றி பெறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
1977-ல் கலைஞரது ஆட்சியைப் பற்றி, எம்.ஜி.ஆர்.எடுத்து சொன்னார். கலைஞரைப் பற்றி, எம்.ஜி.ஆர் விமர்சித்ததை மக்கள் அப்படியே எடுத்துக் கொண்டனர். காரணம்,எம்.ஜி.ஆர்.மீது அன்பு, மதிப்பு, மரியாதை,பாசம் நம்பிக்கை போன்றவை  கட்சிக்கு அப்பாற்பட்டவர்களிடமும் இருந்ததால்தான். கலைஞர் பற்றி எதிர்புணவை, ஒரு கட்டத்தில் [1991]  ஜெயலலிதாவால் சாதகமாக்கிக் கொள்ள முடிந்தது.
ஆனால் அது தொடரவில்லை. ஏனென்றால்  ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்தது போன்ற நல்ல’இமேஜ்’ எதுவும் இல்லை.; கட்சிக்கு வெளியே . மக்களிடையே அவருக்கென்று செல்வாக்கு ஏதுமில்லை. எம்.ஜி.ஆரின் ஓட்டு வங்கி ஜெயலலிதாவுக்கு[ [1991ல்]  உதவியாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட தலைமைப் பண்பு எதுவும்  இருக்கவில்லை.
ஜெயலலிதாவை எதிர்பவர்களில் , யார் சக்தியுள்ளவர்கள் என்று பார்க்காமல். யாருக்கு ஓட்டுப் போட்டால் ஜெயலலிதாவின் ஆட்சியை வீழ்த்த முடியும் என்று நினைத்து தான், கலைஞர், மூப்பனார், ரஜினியை மக்கள் ஆதரித்தார்கள். இப்போது, கலைஞரையும் தி.மு.க வையும் விரும்பாத மக்கள், மாற்று சக்தி எது என நினைக்கும் போது ஜெயலலிதாவை அந்த இடத்துக்குக் கொண்டுவர முயாது. காரணம் அது முடிந்து போன கதை. அவர்கள் மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது. மற்ற தலைவர்களைப் பற்றி , நான்  சொல்ல வரவில்லை.
ஆகையால்  தி.மு.க வையும்  அதன் தலைவர் கலைஞரையும்  எதிர்த்து நடத்தும் தகுதியும் திறமையும், வாய்ப்பும்  எங்களுக்கு தான் இருக்கிறது. எப்படியென்றால், எங்கள் மீது எந்த  விதமான குற்றச் சாட்டையும், யாரும் சொல்லமுடியாது.  நாங்கள் முறைப் படி இயக்கத்தைத் தொடங்கி நடத்துகிறோம். கலைஞர் அண்ணா வின் பாதையை விட்டு விலகி. பயணப்படுகிறார். நாங்கள் அண்ணாவின் பாதையில் இயக்கத்தை நடத்திச் செல்கிறோம்
பகுத்தறிவு பற்றி  பல நூறு மேடைகளில் பேசி விட்டு, அதற்காகவே வாழ்கிறமாதிரி  சொல்லி வந்த கலைஞர்,  இன்றைக்கு  பகுத்தறிவுக்குப் புறம்பாகவே வாழ்ந்துக் கொட்டிருக்கிறார். உங்களுக்குத் தான் தெரியுமே…. மஞ்சள் துண்டு அணிந்து கொண்டதும், மீனம் மேஷம் ராசி நட்சத்திரம் பார்ப்பதும், முழுக்க முழுக்க  ஜோசியத்தை நம்பியே நடப்பதும் மறுக்கவியலாத  சாட்சியங்கள்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின் மேயர் பதவியேற்றபோது, ஜோதிடர்கள் சொன்னவாறு, இத்தனை மணி, இத்தனை நிமிடங்கள் என்று குறிப்பிட்டு பதவி ஏற்கச் செய்ததும், தெளிவான உதாரணங்கள். இதெல்லாம், கலைஞர் பகுத்தறிவை விட்டு விலகி, அண்ணா கண்ட கழகத்தின் கோட்பாடுகளிலிருந்து விலகி, வெகு தூரம் சென்றுவிட்டார் என்பதற்கான அடையாளங்கள். அவர் தி.மு.க.வை இனி சரியான பாதைக்குக் கொண்டு போகவே முடியாது.
ஆனால்,நாங்கள் எங்களது இயக்கத்தை மிகச் சரியான  திசையில் திட்டமிட்டு கொண்டு செல்கிறோம். கட்சி அமைப்பு உறுதியாக இருக்க வேண்டும்  என்பதற்காக கீழிருந்தே திட்டமிட்டு, வேலைகளைச் செய்து வருகிறோம். இரண்டு வருடங்களுக்குள்  இத்தனை எதிப்பு, இவ்வளவு இருட்டடிப்பு  இருந்தும், எங்களது கட்சியை வலுவானதாக்கி, மிகவும் நம்பிக்கையுடன்  செயல்பட்டு வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில்  குறிப்பிடத்தகுந்த  வெற்றியை மக்கள் எங்களுக்குக் கொடுத்து அங்கீகரித்துதுள்ளனர்.
அடுத்த ஆறுமாத காலம், இயக்கத்தின் அமைப்பு பணியில்தான், நாங்கள் தீவிரம் காட்டப்போகிறோம். 1997 மார்ச்சுக்குள், எங்கள் கட்சியின் தேர்தலை நடத்தி முடித்து விடுவோம். அதன் பிறகு, இன்னும் இயக்கத்தை வலுபடுத்த – மக்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக உருவாக, திட்டங்களை வைத்திருக்கிறோம்.  இயக்கம் முன்பைவிட சுறுசுறுப்பாக ,வேகமுடன் செயல்படும். திமுகவுக்கு மாற்று என்பது, மறுமலர்ச்சி  திமுக தான் என்பதற்கான  சூழ்நிலை, நிச்சயம் உருவாகும். மக்களிடையே வேரூன்றிவிட்ட கலைஞர் எதிர்ப்புணர்வை, மதி.முக. மட்டுமே சாதகப்படுத்த முடியும்!
அரசியலில் ,ஒரே நாளில் கூட மாற்றம் வரலாம். கடந்த மார்ச் 15 –ல் கன்னத்தில் கைவைத்து, வாழ்க்கையே போச்சுன்னு கவலைப்பட்டுகிட்டிருந்த கலைஞருக்கு, அடுத்த சில நாட்களிலேயே, அதாவது மார்ச் 26-ந் தேதிக்குப் பிறகு, மாறுதலை சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததுபோல, எங்களுக்கும் வாய்ப்பு உருவாகும்.
நம்பிக்கையுடன் சொல்கிறேன், தமிழக அரசியலின் எதிர்காலம் எங்கள் கையில்தான்! குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!
பேட்டி: என். திருஞானம்

More articles

Latest article