சென்னை: கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதைத்தொடர்ந்து, தமிழக கேரள  எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளவில் இருந்து  இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.

கேரளாவில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,   சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள்யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும்  ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும்,  தமிழ்நாட்டில், தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 122 பேர் உயிரிழந்துள்ளனர்.  கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.