நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

தனி மாநிலம் கோரி கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம் (ENPO) எழுப்பிய கோரிக்கையை ஏற்று அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் இன்று நடைபெற்ற தேர்தலை முழுமையாக புறக்கணித்துள்ளனர்.

60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டமன்றத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ENPO கூறிவருகிறது.

எல்லையோர மாவட்டங்களை பிரித்து எல்லை நாகாலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று 2010 முதல் இந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த 6 மாவட்டங்களில் உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒருவர் கூட இன்று பிற்பகல் வரை வாக்களிக்க வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.