சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19ந்தேதி) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 7 மணி நேர நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு, அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை செலுத்தினர். பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகராறு செய்த நிலையில், அதற்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில், பொதுமக்கள்,  மாநில அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்புகளும் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும், பிற்பகல் வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக  வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நீடித்தது.  வாக்குச்சாவடிக்கு  6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க டோக்கன் விநியோகிக்கப்பட்டதால், அவர்கள் மட்டும் 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில், தமிழ்நாடு முழுவதும்  72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும்,  அதிகபட்சமாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 75.67 சதவீதமும், தருமபுரியில் 75.44 சதவீதமும், சிதம்பரமும் 74.87 தவீதமும் வாக்குப்பதிவு செய்யப்படுகிறது.  மேலும், பெரம்பலூர், நாமக்கல், கரூர், அரக்கோணம், ஆரணி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கடலூர், விருதுநகர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், திருப்பூர், திருவள்ளூர், தேனி, மயிலாடுதுறை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளிலும் 70 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும்,  வாக்கு எண்ணும் இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள பூத் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீலிடப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீலிடப்பட்டது. அந்த அறைகளின் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:  (இரவு 7 மணி நிலவரப்படி – வாக்குப் பதிவு சதவீதத்தில்)

1. கள்ளக்குறிச்சி – 75.67 2. தருமபுரி – 75.44 3. சிதம்பரம் – 74.87 4. பெரம்பலூா் – 74.46 5. நாமக்கல் – 74.29 6. கரூா் – 74.05 7. அரக்கோணம் – 73.92 8. ஆரணி – 73.77 9. சேலம் – 73.55 10. விழுப்புரம் – 73.49 11. திருவண்ணாமலை – 73.35 12. வேலூா் – 73.04 13. காஞ்சிபுரம் – 72.99 14. கிருஷ்ணகிரி – 72.96 15. கடலூா் – 72.40 16. விருதுநகா் – 72.29 17. பொள்ளாச்சி – 72.22 18. நாகப்பட்டினம் – 72.21 19. திருப்பூா் – 72.02 20. திருவள்ளூா் – 71.87 21. தேனி – 71.74 22. மயிலாடுதுறை – 71.45 23. ஈரோடு – 71.42 24. திண்டுக்கல் – 71.37 25. திருச்சி – 71.20 26. கோவை – 71.17 27. நீலகிரி – 71.07 28. தென்காசி – 71.06 29. சிவகங்கை – 71.05 30. ராமநாதபுரம் – 71.05 31. தூத்துக்குடி – 70.93 32. திருநெல்வேலி – 70.46 33. கன்னியாகுமரி – 70.15 34. தஞ்சாவூா் – 69.82 35. ஸ்ரீபெரும்புதூா் – 69.79 36. வட சென்னை – 69.26 37. மதுரை – 68.98 38. தென் சென்னை – 67.82 39. மத்திய சென்னை – 67.35 மொத்தம் – 72.09

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி  இடைத் தோ்தல் – 64.54