திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத்தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி இறைச்சி விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது.

கேரள மாநலிம், ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல்  பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது, மேலும் பரவாமல் இருக்க, அங்குள்ள பறவைகளை அழிக்க மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பறவை காய்ச்சல்  பாதித்த குட்டநாட்டில் கால்நடை பராமரிப்புத் துறையின் (ஏஎச்டி) விரைவுப் பதிலளிப்புக் குழுக்கள் (ஆர்ஆர்டி) பறவைகளை அழிக்கும் பணிகளை  இன்றுமுதல் தொடங்கி உள்ளது.

அதன்படி, பறவைக் காய்ச்சல் பரவும் இடமான எடத்துவா மற்றும் செருதானாவில் சுமார் 21,000 வாத்துகள் அழிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தவிர, ஹாட்ஸ்பாட்களின் ஒரு கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து வளர்ப்புப் பறவைகளும் அழிக்கப்படும் என்று அறிவித்துள்ள சுகாதாரத்துறையினர், ஒரு வாரத்துக்கு இறைச்சி, முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக, பறவை காய்ச்சல்   ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  அதைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில், அதிக அளவிலானகோழிப்பண்ணைகள் ஆழப்புழா மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள  பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள்  கறிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வாத்துக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், வாத்துக்கள், ஏவியான் இன்புளூ வன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக  தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுகளில், சுமார்   1 கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது.  அதன் காரணமாக, அந்த  பகுதியில் இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதில் தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பறவைகளை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, பறவைகளை கொல்லும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று தொடங்கினர். பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பறவை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை போன்ற நாட்டு பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 25-ந்தேதி வரை அமலில் இருக்கும் என  மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.