டெல்லி: அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு  வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், 24மணி நேர பாதுகாப்பு வழங்கும் வகையில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

முக்கிய தலைவர்களுக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு பணியில்,  30 சி.ஆர்.பி.எஃப் கமாண்டோக்கள் மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பாதுடன்,  குண்டு துளைக்காத வாகனம், பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனம் ஆகிய பாதுகாப்பு வாகனங்களும் உண்டு.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,   காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நாடு முழுவதும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்கேவுக்கு  அச்சுறுத்தல் இருப்பதாக எழுந்த பார்வையின் அடிப்படையில்  உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன் கார்கே, பொதுத் தேர்தல் மற்றும் தேர்தலின் போது, நாடு முழுவதும் பரவலாக சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த யதார்த்தத்தை கருத்தில் கொண்டு அவரது பாதுகாப்பை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இசட்-பிளஸ் என்பது இந்தியாவில் அதிக அச்சுறுத்தல் உள்ள நபருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பிரிவு பாதுகாப்பு ஆகும்.

புலனாய்வுப் பணியகம் குறிப்பிடும் ச்சுறுத்தல் பகுப்பாய்வைப் பொறுத்து வி.ஐ.பி பாதுகாப்பு இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பாதுகாப்பு என நான்கு பிரிவுகள் உள்ளன.

சிறப்புப் பாதுகாப்புக் குழுவால் பிரதமருக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சி.ஆர்.பி.எப் கமாண்டோக்களுடன் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளனர்.

சி.ஆர்.பி.எஃப் இந்த பாதுகாப்புப் பணியை கையாள மிகவும் பொருத்தமானது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2019-ல் மோடி அரசாங்கத்தின் ஒரு பெரிய பாதுகாப்பு மதிப்பாய்வுக்குப் பிறகு, 350 அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களின் பாதுகாப்பை மத்திய அரசு அகற்றியதால்  1,300 கமாண்டோக்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது அச்சுறுத்தல் காரணமாக சிலருக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.