ஷம்பு: டெல்லி சலோ பேரணியை நடத்தி வரும் விவசாயிகள், அரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அரியானா மாநில அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசை கண்டித்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது கடும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தற்போது அரியானா மாநில காவல்துறையினர் போராடும் விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கையை வலியுறுத்தி, ‘ டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.   டெல்லி நோக்கி புறப்பட விவசாயிகள் முயன்ற போது, பஞ்சாப், அரியானா எல்லையான கானவுரியில் போலீசாருக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  விவசாயிகள் ஹரியானாவுக்குள் நுழைய முடியாதவாறு கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என தடுப்புகள் அமைக்கப்பட்டடிருந்தது.

முன்னதாக விவசாயிகளுக்கும், மத்தியஅரசுக்கும் இடையே  4 கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டாத நிலையில், , 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்தார். இருந்தாலும் விவசாயிகள் மத்தியஅரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருவதுடன், போராட்டத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, மக்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை  புல்டோசர் போன்ற ஆயுதங்கள் மூலம்  அகற்றி  விவசாயிகள்  உள்ளே நுழைய முயற்சித்தபோது, போலீசார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் 12 போலீசாரும், 3 விவசாயிகளும் படுகாயம் அடைந்தனர்.   இதையடுத்து போராட்டத்தில்ன்போது  வன்முறையை கையில் எடுத்த சில விவசாயிகளை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  கைது சய்தனர்.

இதுகுறித்து அரியானா மாநில அம்பாலா மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால், அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்து இந்த இழப்பு ஈடு செய்யப்படும். எந்த ஒரு சாமானியருக்கும் சொத்து இழப்பு ஏற்பட்டிருந்தால், அவர் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கலாம். தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ், விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு நபரை 12 மாதங்கள் வரை காரணம் இன்றி தடுத்து வைக்க முடியும். ஒரு நபரை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.  காவல்துறையினரின் இந்த அறிவிப்பு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில்,   போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் குண்டால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 21 வயது விவசாயி தலையில் குண்டடி பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் 2 நாட்களுக்கு விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.