டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரது உறவினர் அஜித்பவார் கைப்பற்றிய நிலையில், சரத்பவாரின் புதிய கட்சிக்கு, புதிய சின்னத்தை அகில இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில்,  சரத்பவார் அணிக்கு சரத்சந்திர பவார் என புதிய கட்சி பெயருக்கு ஒப்புதல் வழங்கியதுடன், இதன். சின்னமாக ‛‛ கொம்பு இசைக்கருவியை ஊதும் மனிதன்”  சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, இரண்டாகப் பிளவுபட்டு அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலரான சிவசேனா கட்சிக்கும் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கும் போட்டி நடந்ததைப் போலவே தேசியவாத காங்கிரஸ் கட்சி விஷயத்திலும் நடந்தேறியுள்ளது.
கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மட்டுமே சரத் பவார் பக்கம் உள்ள நிலையில்,  பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவார் வசம் 41 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித்பவார் முழுமையாக கைப்பற்றி உள்ளார். அவரே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேர்தல் ஆணையத்தின்  அங்கீகாரம் கிடைத்தது. கட்சியின் சொத்துகள், வங்கிக்கணக்குள் உள்ளிட்டவற்றையும் ஒதுக்குவதாகவும், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள், நிர்வாகிகள் அஜித் பவார் வசம் அதிகமாக இருப்பதால் எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவெடுத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சரத் பவார் தனது பிரிவுக்கு ஒரு பெயரைத் தேர்வு செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து தன்னுடன்  30 ஆண்டுகளுக்கும் மேலாக  இருந்த கடிகார சின்னத்தை சரத் பவார் இழந்துள்ளார்.
இதனால், புதிய கட்சியை தொடங்கிய  சரத்பவார்,  தன்னுடைய கட்சிக்கு சரத்சந்திர பவார் என பெயர் சூட்டிய நிலையில், புதிய சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம்,  உதய சூரியன், ஒரு ஜோடி கண்ணாடி, ஆலமரம் உள்ளிட்ட மூன்று சின்னங்கள் உள்பட பல சின்னங்களை காண்பித்து ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி கோரியது.
இந்த நிலையில்   ஆணையம் சரத்பவார் அணிக்கு சரத்சந்திர பவார் என புதிய கட்சி பெயரை வழங்கியது. சின்னமாக ‛‛ கொம்பு இசைக்கருவியை ஊதும் மனிதன்” சின்னமாக சரத்பவாருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஏற்கனவே கடந்த  2019ல் இதே போன்ற அணித் தாவலை செய்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சியில் அஜித் பவார் இடம்பெற்றார். எனினும் ஒரே நாளில் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மஹாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்குச் சட்டமன்றத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அவரே தேசியவாத காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.