திருநெல்வேலி: 
“தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலவர் யுவராஜை கொலை செய்ய சதித்திட்டமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தான் மிக பாதுகாப்பாக இருப்பதாகவும், இருவருக்காக  அனைவரையும் எதிரியாக நினைக்கத் தேவையில்லை என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம்  ஒமலூரை சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ்  கொலை வழக்கில், “தீரன் சின்னமலை கவுணடர் பேரவை” தலைவர் யுவராஜ் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் விடப்பட்டுள்ள அவர் தற்போது நெல்லையில் தங்கி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில், யுவராஜை  தாக்க திட்டம் தீட்டியதாக, விடுதலை சிறுத்தை கட்சியின்  நிர்வாகியான நெல்லை சந்திரசேகரன் மற்றும் கீழபாட்டம்  முத்துராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
yuvraj_2846140g
இந்த நிலையில் யுவராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், “எனக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து வெளிவந்த செய்திகளையும் அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டு வரும் கொந்தளிப்பான சூழ்நிலைகளையும் கவனித்து வருகின்றேன்.
இங்கு நான் மிகவும் உயர் பாதுகாப்பில் உள்ளேன். நான் சுவாசிக்கும் காற்று கூட காவல் துறையால் பரிசோதித்து அனுப்பும் அளவிற்கான சூழ்நிலையே இங்கு நிலவுகிறது. ஆகவே யாரும் எவ்வித பதட்டமும் அடைய வேண்டாம்.
மேலும் ஒரு அமைப்பில் இரண்டு பேர் தவறான நோக்கம் கொண்டுள்ளனர் என்பதற்காக  அனைவரையும் விரோதமாக பார்ப்பது சமுதாய அமைதிக்கு ஆபத்தானது.
எதுவாக இருப்பினும் காவல்துறை தனது கடமையை செய்யும் என்பதில் ஐயம் வேண்டாம்.
ஆகவே அனைவரும் அமைதியாக தங்களது பணியில் கவனம் செலுத்துங்கள். இன்னும் சில தினங்களில் பாதுகாப்புடன் சங்ககிரிக்கு வருவேன்” என்று யுவராஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.