உன் இந்தியா.. என் தமிழ்நாடு!: அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் அதிரடி பேச்சு

Must read

சென்னை,

நாம் தமிழர் கட்சி நீட் தேர்வு குறித்து நடத்திய கூட்டத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

”உன்னோட இந்தியாவின் கல்வி முறை வேறு:

எங்கள் தமிழகத்தின் கல்வி முறை வேறு.

ஐம்பது வருடங்களுக்கு முன்பே  நாங்களே ஐந்து கி.மீட்டர் தூரத்துக்கு ஒரு ஆரம்பப் பள்ளி உருவாக்கி படிக்க ஆரம்பித்துவிட்டோம்.

அப்போதே ஆறு மருத்துவக்கல்லூரிகள் கட்டி  படிக்கத் தொடங்கிவிட்டோம்.

உன் இந்தியாவில் பட்டிதொட்டியெங்கும் ஆரம்ப சுகாதாரம் கிடையாது. எங்கள் தமிழ்நாட்டில் கிராமங்கள் தோரும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன. இன்று  வளர்ந்த நாடுகளில் இருந்து மருத்துவம் செய்துகொள்ள வரும் வெளிநாட்டினர் எல்லாம் தமிழ் நாட்டிற்குதான் வருகிறார்கள்.

தலை சிறந்த மருத்துவர்கள் எல்லாம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்தவர்கள்தான். இவர்கள்தான் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். . இன்றைக்கு அமெரிக்காவில் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் பலரும் தமிழர்கள்தான். அந்த நாட்டில் உள்ள மருத்துவமனையில் தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்களா என கேட்டுக்கொண்டுதான் அந்த நாட்டு மக்களே வைத்தியம் பார்க்க வருகிறார்கள்.

உனது  இந்திய கல்வி முறை 50 வருஷம் பின் தங்கியிருக்கு. எங்களது  தமிழ் கல்விமுறை 50 வருஷம் முன்னால் இருக்கிறது. . ஆனாலும் நீ எனக்கு (இந்தியா) கல்வித் தரத்தைப் பற்றி வகுப்பெடுக்கிறாய். நீ எனக்கு தகுதித் தேர்வு என்கிறாய்.

இங்கேயிருக்கும் கல்வி அமைச்சர்களும் வடநாட்டு நிபுணர்களை வைத்து நீட் தேர்வு பயிற்சி கொடுக்க போகிறோம் என்கிறார்கள். வெட்கமாக இல்லை?

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வித் தரம் என்ன… இந்தியாவின் மருத்துவக் கல்வித்தரம் என்ன.? யார் யாருக்கு பயிற்சி கொடுப்பது?

தகுதியற்றவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு, தகுதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.” என்றார்.

மேலும், “என் இரண்டாவது மகன் பெயர் பிரபாகரன். என்னடான்னு யோசிக்காதீங்க. 1983-ல் அங்கே இலங்கையில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது, நாங் இங்கே கல்லூரி மாணவன். மூன்றாண்டுகள் இறங்கி போராடிக் கொண்டிருந்தோம்” என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும் சுட்டுப்போட்டாலும் இந்தி வராது. வரவுமில்லை.  அப்படியே விட்டுட்டுட்டோம். அவரது பதவிக்காலம் முடியும் போது, அந்த குடியரசு மாளிகையில இருந்த ஊழியர்கள்தான் பட்லர் தமிழ் கற்றுக்கொண்டார்களே ஒழிய, நாங்க இந்தி கற்றுக்கொள்ளவே இல்லை” என்று பேசினார் பொன்ராஜ்.

(தகவல்: மூத்தபத்திரிகையாளர் பா.ஏகலைவன்)

More articles

Latest article