சென்னை: “இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்” என்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகஅரசு சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முதல்வர்களில் நான் முதலிடம் என்பதைவிட தமிழகம்தான் மற்ற மாநிலங்களைவிட முன்னணியாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.  “விபத்துகளை பொறுத்தவரை இந்திய அளவில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது வருத்தத்தை தருகிறது.  சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் தான் சமூக பண்பாடு தனிமனித ஒழுக்கம் இருக்கிறது. தனிநபரின் உயர் நாட்டுக்கு மிக முக்கியம். சாலை பாதுகாப்பை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்கும் இன்னுயிர் காப்போம் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 610 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

தனிநபரின் உயிர் நாட்டுக்கு மிக முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  விபத்துக்கு முக்கிய காரணம் சாலைகளில் வேகமாக செல்வது, எனவே சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்; கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.