சென்னை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள்  தங்கியுள்ள விடுதியில்  வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாகவும், அந்த உணவைச் சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் 6 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் சக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்னர். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியவர், 159 பேர் டயாரியாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 155 பேர் வீடு திரும்பிய நிலையில், 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கை வெளியிட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த  6 பெண்களில் 2 பெண்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும், மீதமுள்ள 4 பேர்  மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆனால், மாவட்ட ஆட்சியரின் தகவலை நம்ப மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை  வீடியோ கால் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச வைத்தனர். மேலும், இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வார்டன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டக்கார்களுக்கும், அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஒரு தரப்பினர் ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர், வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். இது அங்கு மேலும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.