சென்னை: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகனுக்கு ’விசில்’ அடிக்கலாம்; ஆனால் நாட்டை கொடுக்கக் கூடாது என கூறி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்களில் பலர் நடிகர்களாக இருந்து ஆட்சியை பிடித்த நிலையில், பிரகாஷ் ராஜின் பேச்சு  சமூக வலைதளங்களில் கடுயாயாக விமர்சிக்கப்படுகிறது. திரையுலக கவர்சியால், பணத்துக்காக பிரசாரத்திற்கு வந்திருக்கும் அவருக்கு தமிழ்நாடு அரசியல் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

திமுக தலைவராகவும், தற்போதைய முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், அவரது மகன் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிகர்களே. அதுபோல மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒரு நாடக நடிகராக, எழுத்தாளராக இருந்தவர்தான். அப்படி இருக்கும்போது, நடிகர் விஜயை கூறுவதாக நினைத்து, சொந்த கட்சிக்கே சூனியம் வைத்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

திண்டுக்கல்  சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து, திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, , “நான் இன்று உங்கள் முன்பே ஒரு நடிகனாக வரவில்லை. நடிகன் என்பது எனது தொழில். அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டதால், டிக்கெட் எடுத்து படம் பார்த்து என்னை வாழ வைத்தவர்கள் நீங்கள். அந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்?

நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனை வரும்போது ஓடி வருவதுதான் ஒரு கலைஞனின் கடமை. அந்த அடிப்படையில், ஒரு வாக்காளனாக உங்களிடம் பேச வந்துள்ளேன்” என கூறினார்.  “இந்தத் தேர்தலை மூன்று மாடல்களுக்கான தேர்தலாக பார்க்க வேண்டும். ஒன்று கல்வி மற்றும் மொழியைக் காக்கும் திராவிட மாடல். இரண்டாவது, தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை மாடல். மூன்றாவது ஒரே நாளில் முதலமைச்சர் ஆக துடிக்கும் சினிமா மாடல்.

பாஜக சொல்வது ’டபுள் இன்ஜின் சர்க்கார்’ அல்ல, அது வெறும் ’டப்பா சர்க்கார்’. தமிழ்நாட்டிற்குள் பாஜக என்கிற பாம்பைத் அதிமுகவினர் தங்களின் சுயநலத்திற்காக இழுத்து வருகின்றனர். தன்மானத்தைத் தூக்கிக் கொண்டு போய், மோடியின் காலடியில் வைக்கும் அடிமை மாடல் நமக்குத் தேவையா?” என்று விமர்சித்த பிரகாஷ்ராஜ்,  ”தமிழ்நாடு ஒரு கிணறு போன்றது. அதில் தவளைகளாகிய நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றவர்,  விஜய் அரசியல் பயணத்தை சூசகமாக விமர்சித்தார்.

“சினிமாவில் பெரிய ஹீரோவாகலாம், ஒரே படத்தில் முதலமைச்சராக கூட ஆகலாம். ஆனால் நிஜ அரசியலில் முதலமைச்சராக முடியாது. என் அளவுக்காவது நீங்கள் (விஜய்) அரசியல் பேச முடியுமா? தமிழ்நாட்டில் மொழி, இனம் சார்ந்த பிரச்சனைகள் வந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

மக்கள் காட்டும் அன்பை தவறாக பயன்படுத்தாதீர்கள். மக்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நடிகனைப் பிடித்தால் அவருக்கு விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுத்துவிடக் கூடாது” என கூறினார்.

முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், ”தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. பெரும்பான்மையை வைத்து எதையும் தீர்மானிக்க முடியும் என மத்திய அரசு நினைத்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றினால் தென்னிந்தியா அரசியல் அநாதையாக மாறும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. பெரும்பான்மையை வைத்து தான் அனைத்தும் தீர்மானிக்கப்படும் என்றால், காகத்தைத்தான் தேசியப் பறவை ஆக்க வேண்டும், மயிலை அல்ல என்று அண்ணா அன்றே சொன்னார்” என பிரகாஷ்ராஜ் பேசினார்.

[youtube-feed feed=1]