சென்னை: 6மாதங்களுக்கு பிறகு கோவில் சொத்துக்களை இணையதளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்  என தமிழக அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. இதில், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இவற்றை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது என்பது தொடர்பாக தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. மேலும், கோயில்களின் வரவு, செலவு உள்ளிட்ட விவரங்களும் கோயில் நிர்வாகத்தால் அறிவிப்பு பலகையில் ஓரிரு நாட்கள் மட்டுமே ஒட்டப்படுகிறது.

மேலும், மாநிலத்தில் அறநிலையத்துறையின் கீழ் வரும்  கோயில்களில் 3.37 லட்சம் சிலைகள், உலோக திருமேனிகள் உள்ளது. இந்த சிலைகள், கோயில் நகைகள் எவ்வளவு இருக்கிறது என்பது தொடர்பாகவும், அது எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பான தகவல்கள் முழுவதும் ஆவணங்களாக அந்தந்த கோயில் அலுவலகங்களில் முடங்கிக் கிடக்கிறது.

இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  துறைஅதிகாரிகளுடன் கடந்த மே மாதம் 28ந்தேதி அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, இன்று இந்து சமய அறநிலையத்துறையின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் ஸ்கேனிங் செய்யும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்ததார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  இந்து அறநிலையத்துறை கோவில்களின் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை  6 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவில் சம்பந்தமான அனைத்து ஆவணங்களும்  இணையத்தில் பதிவேற்றிய பிறகு, பொதுமக்கள் இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம் என தெரிவித்தார்.