சென்னை

நேற்று சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழக முதல்வராக 18 ஆண்டுகள் பணி புரிந்தவரும் திமுக தலைவருமான மு கருணாநிதி. த. 80 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அன்று தனது 95 வயதில் இவர் மரணம் அடைந்தார்.  கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எனவே பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.  நேற்று இவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் மு க ஸ்டாலின் முதலில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிட கல்வெட்டு மற்றும் சிலையைத் திறந்து வைத்தார்.

பிறகு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்வர் திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தைப் பொதுமக்களின் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நேற்று நடந்த கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் அமைச்சர்கள், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், வைகோ, கோபாலகிருஷணன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது அமைச்சர் துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ரஜினிகாந்த்துடன் பேட்டரி வாகனத்தில் சென்று கருணாநிதி நினைவிடத்தைப் பார்வையிட்டனர். கருணாநிதி நினைவிடத்தில், முதல்வர், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.