ஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது வாடிக்கை. ஏற்காட்டில் கடந்த 1976 முதல் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு 44வது ஆண்டாக கோடை விழா, மலர்க் கண்காட்சி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், தோட்டக் கலைத் துறையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. 2019 மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால், கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகினி, “கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்கப்பட உள்ளன. அத்தோடு கோடை விடுமுறை முடிவுக்கு வரும். அதற்கு முன்பாக கோடை விழா நடத்த ஏற்காட்டில் தீவிரமாக பணிகள் நடக்கிறது. தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த ஆண்டு விழா நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்னேசன் மலர்செடிகள் நடவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் பால்சம், ஜூனியா, டேலியா, பிளாக்ஸ், கேலண்டுலா, சாமந்தி, செவ்வந்தி, ஜெரனியம், சால்வியா உள்ளிட்ட 20 வகையான மலர்செடிகள் நடவு செய்து, தயார் நிலையில் உள்ளன.

மலர் படுகைகள், புல்வெளிகள், அலங்கார வளைவுகள் உள்ளிட்டவற்றைப் பராமரித்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்லப் பிராணிகள் கண்காட்சி, சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. ஏற்காட்டில் நெகிழிப் பொருட்கள் உபயோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், முதன்முறையாக பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக, இந்த விழாவை கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.