எடியூரப்பா கையில் எடுக்கும் இன்னொரு ‘ஆபரேஷன்’…

Must read

ர்நாடகாவின் ஒரு நாள் முதல்வரான எடியூரப்பா- அங்குள்ள  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை கவிழ்க்க இரண்டு முறை ‘தாமரை ஆபரேஷன்’ முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் அந்த ஆபரேஷன் –அபார்ஷனில் தான் முடிந்தது.

மக்களவை தேர்தலில் தனது கட்சியான  பா.ஜ.க.வெற்றி பெற அவர் இன்னொரு ஆபரேஷனை  கையில் எடுத்து-  சுட்டுக்கொண்டார்.

44 வீரர்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டதற்கு-பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஆபரேஷன் நடத்தி –தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்தது-நமது ராணுவம்.

இதை தேர்தல் வெற்றிக்கு பயன் படுத்த முயன்றார்-எடியூரப்பா.’’இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கால் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 22 இடங்களை பா.ஜ.க.கைப்பற்றும்’’ என்று அவர் திருவாய் மலர- சரமாரியாக சகல தரப்புகளில் இருந்தும் உதை விழுந்தது.

‘’இது கேவலமான அரசியல்’’என்று அங்குள்ள முதல்வர் குமாரசாமி கொதித்தார்.

‘’தனது கருத்தை எடியூரப்பா வாபஸ் பெற வேண்டும்.நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

பதறிப்போன எடியூரப்பா ‘அப்படி நான் சொல்ல வில்லை’’என பல்டி அடிக்க-

‘’எடியூரப்பா பேசியது வீடியோவில் பதிவாகி உள்ளது. அதை மாற்ற முடியுமா?’’ என எதிர்க்கட்சிகள் கோரசாக குரல் எழுப்ப- டெல்லி பா.ஜ.க.மேலிடம் எடியூரப்பா மீது கடும் கோபத்தில் உள்ளது.

எனினும் எடியூரப்பாவுக்கு என்று கர்நாடகாவில் கொஞ்சம் ஓட்டுகள் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது -டெல்லி.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article