பெங்களூர்:
ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டார். இதனால் கர்நாடக பா.ஜ.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநிலத்தில்,பிளாட்கள் வாங்கி விற்றது மற்றும் நிலக்கரி சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட 4 பேர் மீது ரூ.40 கோடி ஊழல் வழக்கு பதிவு செய்து  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்த போது தனது செல்வாக்கை பயன்படுத்தி ரெட்டி சகோதரர்களுக்கு  நிலக்கரி ஒப்பந்தம் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்த பணத்தை  எடியூரப்பாவின் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டதாகவும் கர்நாடக மாநில லோக் அயுக்தா குற்றம் சாட்டியிருந்தது.

இதன் காரணமாக பதவி விலகிய எடியூரப்பா,  சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மேற்படி குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கண்ணீருடன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ. நீதிமன்றம் எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் ஆகிய 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
வரும் 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டிருப்பது கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவனாகி விட்டேன் என கூறியுள்ளார்.
இதன் காரணமாக கர்நாடக பா.ஜ.கவினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.