பதவிக்கு ஆபத்தா? ; பி.எஸ். எடியூரப்பா திடீர் டெல்லி பயணம்..
பா.ஜ.க.வில் 75 வயதைத் தாண்டியவர்களுக்குக் கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பு கொடுப்பதில்லை என்பது ,மோடி பிரதமராகப் பதவி ஏற்றபின் ஒரு விதியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
விதி விலக்காகக் கர்நாடக முதல்- அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா 78 வயதைக் கடந்த நிலையிலும் பதவியில் நீடிக்கிறார்.
எடியூரப்பாவின் பதவிக்காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் , அவரை மாற்றி விட்டு நடுத்தர வயது நிரம்பியவரை புதிய முதல்வராக நியமிக்க பா.ஜ.க.. மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சில தினங்களாக இது குறித்த செய்திகள் கர்நாடக ஊடகங்களில் வரும் நிலையில், இதனைத்  திட்டவட்டமாக மறுத்து பி.எஸ்.எடியூரப்பா ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.
’’நான் முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்படப்போவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தி. அதனை யாரும் நம்ப வேண்டாம்.. முதல்- அமைச்சராக நானே நீடிப்பேன்’’ என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் எடியூரப்பா நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கொரோனா பரவலுக்குப் பிறகு அவர் டெல்லி செல்வது இதுவே முதல் முறை.
’’எடியூரப்பா முதல்வராக நீடித்தால், அடுத்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.படுதோல்வி அடையும். எனவே அவரை மாற்ற வேண்டும்’’ என அவருக்கு எதிரான கோஷ்டியினர் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.
-பா.பாரதி.