சென்னை:  சென்னை ஈசிஆர் சாலையில்,   திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மற்றொர காரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டும், ஆபாசமாக பேசியும்,  அவர்களின் காரை பின்தொடர்ந்து துரத்தியும் சேட்டை செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை ஆபாசமாக பேசியும், அவர்களை துரத்திச் சென்றும் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இது பரபரப்பை ஏற்படுத்தி துள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் திமுக அனுதாபி ஞானசேகரன் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பேசிய யார் அந்த சார்? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திமுகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவம் சென்னை இசிஆர் எனப்படும் கடற்கரை சாலையில் அரங்கேறி உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களான,  சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வசித்து வரும் சின்னி திலகா என்பவர், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரது புகார் மனுவில்,  கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக திமுக கொடி கட்டிய கார்களில் வந்த இளைஞர்கள் சிலர், மது போதையில் தங்களை தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும், அதனால், நாங்கள்   அங்கிருந்து கிளம்பியபோது, தங்களை பின்தொடர்ந்து காரில் துரத்தி அந்த இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாகவும் அந்த பெண், புகாில் தெரிவித்துள்ளார்.  இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இச்சம்பவம் குறித்து, வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ்தள பதிவில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இதுகுறித்து புகாரளித்தால் “இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது” என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமைகூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?

குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?  என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.