டெல்லி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர  காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை  விதித்துள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர்  கைது செய்யப்ட்டுள்ள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு  தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்  சென்னை காவல் ஆணையர் அருண், பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது ஒருதலைப்பட்சமான பேட்டி, விவாதப்பொருளாக மாறியது. மேலும், மாணவி கொடுத்த எஃப்ஐஆர் வெளியானதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி  சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் – காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு