சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரியும் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற் சங்கத்துக்கு அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
37 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் முன்னின்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும், தொழிற்சங்கம் அமைப்பது குறித்தும் அதனை பதிவு செய்வது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக முடிவெடுக்க அரசுக்கு நீதிமன்றம் ஆறு வார காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை இன்று அறிவித்துள்ளது.