போவா, சீனா

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாடு வெளிநாட்டுடன் வர்த்தகம் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீனா – அமெரிக்கா இடையே தற்போது வர்த்தகம் மிகவும் தொய்வில் உள்ளது.   இதனால் சீனாவுக்கு வர்த்தக வருமானம் குறைந்துக் கொண்டு வருகிறது.   அதை சரிக்கட்ட சீன அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   இந்நிலையில் சீனாவில் உள்ள போவா நகரில் சர்வதேச வர்த்தக அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார்.

ஜி ஜின்பிங் தனது உரையில், “வெளிநாட்டு வர்த்தகர்களுக்காக எப்போதும் சீனச் சந்தை காத்துக் கொண்டு உள்ளது.   மேலும் சீனாவின் உற்பத்தி மற்றும் நிதித்துறை பொருளாதார தாராளமயமாக்கலில்  தேவையான உதவிகள் செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றன.

சீனாவின் உற்பத்தி நிறுவனங்களுடன் வெளிநாட்டு வர்த்தகர்களை நேரடியாக வர்த்தகம் செய்ய நான் அழைக்கிறேன்.    சீனாவில் வெளிநாட்டு போக்குவரத்து நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளதால்  வாகனங்களும் மற்றும் உதிரி பாகங்களும் குறைந்த செலவில் அனுப்பி வைக்க முடியும்.” என தெரிவித்தார்.

சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றிய ஜி ஜின்பிங் அமெரிக்காவை பற்றியோ அல்லது டொனால்ட் ட்ரம்ப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.