சென்னை:
மது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், “திராவிட இயக்கம் ஒரு கொள்கை குடும்பம். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம்.

வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர். இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சனம் செய்துகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும். அவர்களை பார்த்து நான் கேட்க விரும்புவது இதே பாஜக ஆட்சி 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன்னாள் கொடுத்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்களா.

வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்று சொன்னார்களே, ரூ.15 லட்சம் கூட வேண்டாம் ரூ.15 ரூபாயாவது தந்தார்களா?. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியுள்ளதா?. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதைக் கூட செய்யவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை கண்டும் காணாமலும் போனது பாஜக ஆட்சி.

இந்திய நாட்டிற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. இந்த ஆபத்தில் இருந்து நாட்டினை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பிரதமர் என்ற நிலையை மறந்து மோடி ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. யார் ஆட்சி இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காக அண்மையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். இம்மியளவும் பயப்படாமல் கொள்கை, லட்சியத்தை மனதில் வைத்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.