உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்தப்பட்டது.
சீன மருத்துவமனை ஒன்றில் மூளைச் சாவடைந்த ஒரு நோயாளிக்கு இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஞாயிறன்று நடைபெற்றதாகவும் 96 மணி நேரத்திற்குப் பிறகும் அந்த கல்லீரல் எந்தவித பிரச்சனையும் இன்றி செயல்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழக்க நேரிடும் நிலையில் இந்த பன்றி கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உறுப்பு பற்றாக்குறையைப் போக்க உதவும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகங்கள் மற்றும் இதயங்களை மூளை சாவடைந்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் மாற்றியுள்ளனர்.
ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெரிய சவாலானது மட்டுமல்ல மிகவும் சிக்கலானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீன மருத்துவர்களின் இந்த சாதனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மற்றொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.