புதுடெல்லி:

உலகிலேயே குறைந்த விலையில் கிடைத்து வந்த நானோ காரின் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


கடந்த 2009-ம் ஆண்டு குறைந்த விலையிலான நானோ காரை டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஏழை மக்களுக்கும் கார் பயன்பட வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் கனவில் உருவானதே இந்த நானோ கார்.

உலகிலேயே குறைவான விலை கொண்ட கார் என்ற விளம்பரமே, இதன் விற்பனை வீழ்ச்சியடைந்ததற்கு காரணமாகக் கூறுகின்றனர். மேலும் நானோ காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, என்ஜினில் அடிக்கடி புகை வரத் தொடங்கியது.

இதுவும், விற்பனை வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆட்டோமோபைல் நிபுணர்கள். இதன்பின்னர், வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நானோ கார்கள் சோதனை ஒட்டத்தில் தோல்வி அடைந்தன.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, மோட்டார் உற்பத்தியில் கொண்டு வரப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள், புகை வெளியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்த அதிகம் செலவாகும்.

நானோ காருக்கு இத்தகைய மாற்றத்தை செய்வது சாத்தியமில்லை. எனவேதான், நானோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நானோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.