மதுரை:  விளையாட்டில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உலக ஷ்குவாஸ் போட்டி ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் கூறினார். அப்போது மாணவ மாணவிகளுக்கு விளயாட்டும் கல்வியும் முக்கியம் என்றார்.

மதுரை லேடி டோக் கல்லூரி கல்லூரியில் விளையாட்டில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. அர்ஜூனா விருது பெற்ற  மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா (மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட 3 பதக்கம் பெற்றவர்) மற்றும் சர்வதேச, தேசிய போட்டியில் சாதித்த மாணவிகள் ரேவதி, ரோசிமீனா ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், மூர்த்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, அன்பில் மகேஷ்,  கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில், சாதனை வீராங்கனைகளான ஜெர்லின் அனிகா, ரோசி மீனா, ரேவதி ஆகிேயாரை பாராட்டி அமைச்சர் நினைவு பரிசு மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். மேலும் பயிற்சியாளர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழிச்சியில் பேசிய உதயநிதி,  தான், விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து எங்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும் அங்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறேன். சாதாரணமாக பொருளியல் (எக்னாமிக்ஸ்) படிப்பை படிப்பது கடினம். அந்த பிரிவில் ஒரு மாணவி விளையாட்டில் சாதித்து இருக்கிறார் என்றால் ஜெர்லின்அனிகாவை பாராட்டிதான் ஆக வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீராங்கனை ஜெர்லின்அனிகாவிற்கு கடந்த ஒரு ஆண்டில் தமிழக அரசு சார்பில் 79 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில் தற்போது முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 25 கோடி ரூபாய் பரிசு தொகையுடன் 15 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வருகிற ஜூன் மாதம் சென்னையில் உலகக்கோப்பை ஷ்குவாஸ் போட்டி நடைபெற உள்ளது. அதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சென்னையில் ஆசிய ஆக்கி போட்டியும் நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அரசு பல்வேறு விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த உள்ளது.

கிரிக்கெட், கால்பந்து போட்டியை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க விருப்பப்படுகிறோம். அதுவே நம் குடும்பத்தில் இருந்து பெண் ஒருவர் விளையாட சென்றால் பயப்படுகிறோம். விளையாட்டும் முக்கியம் தான். இந்த அரசு கல்வி, விளையாட்டு, மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அங்கு நடக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.