சேலம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தெய்வராணி. இவர் சேலம் பெரியார் பலைக்கழகத்தில்  1998-ம் ஆண்டில் தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால், பின்னர் 2022ல் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2002ல் தினக்கூலி வேலை எனக் கூறி அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதனை எதிர்த்து, தெய்வராணி,  சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரை விசாரித்து வந்த தொழிலாளர் நீதிமன்றம், தெய்வராணியை பணியில் சேர்த்துக் கொள்ள 2013ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் அவருக்கு வேலையும் கொடுக்கவில்லை, சம்பளமும் வழங்கவில்லை.

இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி,  பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத  சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டு, வழக்கை  15ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.