வாஷிங்டன்

ங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இந்தியாவை விடப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது பல உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை  காணப்படுகிறது. இந்தியாவிலும் இத்தகைய பாதிப்பு உள்ளது.   இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த  உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ்  வங்கி கணித்திருந்த  போதிலும் இந்த வளர்ச்சி உண்மையில் 5  சதவீதமாகத்தான் உள்ளது என்பதைச் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

கடந்த வாரம் ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்)  தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அந்த அமைப்பின்  இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, ‘‘பொருளாதார மந்த நிலையால்பாதிகப்பட்டுள்ள உலகில் 90 சதவீத நாடுகளில்  இந்தியாவின் நிலைமை படு மோசமாக உள்ளது’’ எனக் கூறியிருந்தார்.   அத்துடன் ஜெனீவாவில் உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு, உலக  நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் கடந்த ஆண்டு  58வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 10 இடங்கள் பின்தங்கி  68வது இடத்தை பெற்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

நேற்று இந்தியப் பொருளாதாரம் ஏற்கெனவே நிர்ணயித்திருந்ததை விட மிகக்  குறைவாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.  இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான  கணிப்பை உலக வங்கி கடந்த ஏப்ரலில் வெளியிட்டிருந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு  நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. தற்போது அந்த வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே  இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த  நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், 2021-22  நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும் எனவும் வங்கதேசம், நேபாளத்தை  விட இந்தியா பின்தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

உலக  வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான தலைமை பொருளாதார வல்லுநர்  ஹன்ஸ் டிம்மர் கூறுகையில், ‘‘சமீபத்திய உலக பொருளாதார மந்த  நிலையால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான்  பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாகக் குறைத்துக் கணித்துள்ளோம்.

நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டிலும்,  அடுத்த நிதியாண்டிலும் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும்.  சேவைத்துறைகள் வலுவாக உள்ளது, கட்டுமான துறைகள் வளர்ச்சி,  சுற்றுலா வளர்ச்சி, மக்களிடம் பணப்புழக்கம் காரணமாக இது  சாத்தியமாகியுள்ளது.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 8.1  சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டில் 7.2  சதவீதமாகவும்,  2021ல் 7.3 சதவீதமாகவும் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தத்  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரி  குறைப்பு மற்றும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.

அத்துடன் தொழில்துறைகள் மந்த நிலையில் இருந்து  மீளும் வகையிலும், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள  வசதியாக, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என  மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதையொட்டி  தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ்  வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்தில் இருந்து  6.1 சதவீதமாகக் குறைத்துக் கணித்தது.