டில்லி

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுப் புழக்கத்தை நிறுத்த உள்ளதாக ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில் அது குறித்த உண்மையைக் காண்போம்..

தற்போது சில நாட்களாக எந்த ஒரு ஏடிஎம் மிலும் ரூ.2000 நோட்டுக்கள் இல்லாமல் இருந்தது.   தேர்தலையொட்டி இந்த நோட்டுக்கள் பதுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.   அதைப் போல் தேர்தலுக்குப் பிறகு நோட்டுக்கள் ஓரளவுக்கு வர ஆரம்பித்தன.  இந்த செய்தி பொய் என அதன் மூலம் தெரிய வந்தது.   தற்போது வேறொரு செய்தி வைரலாகி மக்களைப் பீதிக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்தச் செய்தியில், “ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்க உள்ளது.  இந்த மாதம் 10 ஆம் தேதிக்குப் பிறகு மக்களால் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற இயலாது.   அதற்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இவ்வாறு 10 நாட்களில் ரூ.50000 மட்டுமே மாற்ற முடியும்.  எனவே உங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே கடும் பீதியை உருவாக்கிய இந்த செய்தியால் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.  இது குறித்து செய்தி ஊடகங்கள் ரிசர்வ் வங்கியை அணுகி உள்ளன.  ரிசர்வ் வங்கி இந்த தகவலைப் போலி என மறுத்துள்ளது.  ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர், இது போல ஒரு திட்டம் வங்கியிடம் இல்லை எனவும் இதைப் போல் வரும் ஜனவரி 1 முதல் ரூ.1000 நோட்டுக்களை வெளியிடும் எண்ணமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது போல ஒரு செய்தி ஏற்கனவே கடந்த வருடம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.