க்னோ

ராமர் கோவில் வழக்கு இறுதிக்கட்ட விசாரணையையொட்டி டிசம்பர் 10 வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராம் ஜென்ம பூமி – பாபர் மசூதி நில விவகார வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது.   இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஆகஸ்ட் 6 முதல் தினசரி விசாரணை செய்து வருகிறது.   வரும் 17 ஆம் தேதியுடன் இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் இஸ்லாமியத் தரப்பினர் தங்கள் வாதங்களை நிறைவு செய்ய உள்ளனர்.  இன்னும் இரு தினங்களுக்கு இதற்கான மறுப்புக்களை இந்து அமைப்பினர் தெரிவிக்க உள்ளனர்.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி அன்று ஓய்வு பெறுகிறார்.  எனவே அன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் ஜா, “சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.   வரும் நாட்களில் இம்மாநிலத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.  இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும்” என அறிவித்துள்ளார்.