டில்லி

டில்லி- லக்னோ இடையே செல்லும் தனியார் ரெயிலில் ரெயில்வே கட்டண விதிகளை பின்பற்றாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்காம் தேதி டில்லி மற்றும் லக்னோ இடையே செல்லும் தனியார் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது..   இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.   அத்துடன் விரைவில் மேலும் 150 ரெயில்களையும் 50 ரெயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.

ரெயில்வே சட்டப்படி அனைத்து ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கட்டணங்களை மத்திய அரசு மட்டுமே நிர்ணயிக்க முடியும்.   ரெயில்வேயினொரு அங்கமான ஐஆர்டிசி க்கும் அந்த அதிகாரம் கிடையாது.    ஆனால் தனியார் ரெயிலான டில்லி – லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரசில் அதே பாதையில் இயங்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை விட மூன்றில் ஒரு பங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதாப்தி ரெயிலில் ஏசி எக்ஸிக்யூடிவ் வகுப்பில் பயணக் கட்டணமாக ரூ.1865 உள்ள நிலையில் தனியார் ரெயிலில் இதே வகுப்புக்கு ரூ.2450 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  அதைப் போல் ஏசி சாதாரண வகுப்புக் கட்டணம் ரூ.1165 ஆகும்.   ஆனால் தனியார் ரெயிலில் அதே வகுப்புக்கு ரு.1565 கட்டணம் ஆகிறது.  அத்துடன் 5 வயதுக்குப்பட்டோருக்குக் கட்டணம் கிடையாது என்னும் ரெயில்வே விதிகளும் பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

முதல் முதலாக அறிமுகமான தனியார் ரெயிலில் இவ்வாறு விதிகளை மீறிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 150 ரெயில்கள் தனியார் மயமாக்கப்படும் செய்தி ரெயில் பயணிகள் மனதில் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.