விருதுநகர்:

திக மதிப்பெண்கள், ஏராளமான பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிக்கு வர வற்புறுத்திய பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்யக்கோரி மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் கணித துறை பேராசிரியை நிர்மலாதேவி. இவர்,  அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம்,  மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலர் உங்களை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் புத்திசாலிகள். நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் என்றார்.

பேராசிரியை நிர்மலாதேவியின் பேச்சு தங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லப் போகிறது என்பதை புரிந்து கொண்ட மாணவி, மேடம், எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. இனி அதுபற்றி பேசாதீர்கள் என்று கூறுகிறார். இருப்பினும் தொடர்ந்து நிர்மலாதேவி 4 மாணவிகளையும் அதிகாரிகள் ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்துகிறார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமாரும் கூறி உள்ளார்.

இதுகுறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரான செல்லத்துரை, நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன்காரணமாக  மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பேராசிரியையை கைது செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த மகளிர் அமைப்புகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.