டில்லி:

கோடை காலத்திற்கு முன்பே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த ஆண்டு கோடைக்காலத்துக்கு முன்பே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 588மாவட்டங்களில் மழைப்பொழிவின் அளவை ஆய்வு செய்த இந்திய வானிலை மையம் அ வறட்சிப் பகுதி குறித்த வரைபடத்தை  வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ளபடி,  கடந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்த 404மாவட்டங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,   109 மாவட்டங்களில் லேசான வறட்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

153 மாவட்டங்கள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை மையம்,  கடந்த குளிர்காலத்தில் மழைப்பொழிவு குறைந்ததே இந்த வறட்சிக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வறட்சி பட்டியலில், தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடும் வறட்சியுள்ள மாவட்டங்கள் பட்டியலில் உள்ளன. மதுரை, சிவகங்கை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் வறட்சி நிலவுவதாக வானிலை ஆய்வுமையத்தின் வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.

வெப்பசலனம் காரணமாக மழை?

இதற்கிடையில் தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு காணப்படுகிறது. இதுதவிர, வெப்பச்சலனம் காரணமாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னல் காணப்படும் என்றும் கூறி உள்ளது.