சென்னை:

டிகர் கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், வருகிற 8-ந்தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசுகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சென்னை யில் நடைபெறும் முதல்க பொதுக்கூட்டம் என்பதால் கமல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

கமல் தனது கட்சியை நிர்வகிக்க  15 பேர்களை  கொண்ட உயர்மட்டக்குழுவை அமைத்துள்ள நிலையில், தற்போது 10 பேர் கொண்ட பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டு உள்ளார்.

இதற்கிடையில்,  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண் தொழில் முனைவோர் 300க்கும் மேற்பட்டோர்  ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து, அவரது கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துகொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய கமல், பெண்கள் சமூக வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதாகவும், தனது கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், தனது கட்சியின் உறுப்பினர்களாக பெண்களை அதிக அளவில் சேர்க்கும் விதத்தில், சர்வதேச மகளிர் தினத்தை சென்னையில்  பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

அதன்படி வருகிற   8-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பெண்கள் ஏராளமான அளவில் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கட்சி தொடங்கிய பிறகு கமல் சென்னையில் நடத்தும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவும், இதன் மூலம், தமிழக  பெண்களின் ஆதரவு எனக்கே என்று ஆட்சியாளர்களுக்கு கமல் எச்சரிக்கை விடுக்கும் அளவில்  கூட்டம் நடைபெறும் என்று அவரது கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.