காலடி, கேரளா

ண்களைப் போல் ஜீன்ஸ் உடை அணியும் பெண்களுக்கு ஆணும் பெண்ணும் இல்லாமல் மூன்றாம் பாலின குழந்தைகள் பிறக்கும் என கேரள பேராசிரியர் கூறியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

மூன்றாம் பாலினம் என்னும் பிரிவுக்கு வருபவர்கள் பிறப்பால் உள்ள பாலினத்துக்கு மாறுபட்ட மன ஓட்டம் உள்ளவர்கள் ஆவார்கள்.   உதாரணத்துக்கு பிறப்பால் ஆணாகப் பிறந்தவர் தன்னை பெண்ணாக உணரும் போது அவரை திருநங்கை எனவும்,   அதே போல் பிறப்பால் பெண்ணாக பிறந்தவர் தன்னை ஆணாக உணரும் போது திருநம்பி எனவும் அழைக்கப்படுகின்றனர்.    அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாலின மாற்று அறுவை சிகிச்சையும் சட்டத்துக்கு உட்பட்டவை ஆகும்.

கேரளா மாநிலம் காலடியில் வசித்து வரும் பேராசிரியர் ரஜித் குமார்.   இவர் சமீபத்தில் காசர்கோடு பகுதியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “தற்போது பெண்கள் ஆண்களைப் போல் ஜீன்ஸ் அணிகிறார்கள்.   அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்?  தனது தாய் பெண்ணாக இருந்து ஆண் போல உடை அணிவதால் அந்தக் குழந்தைகளும்   ஆணாக பிறந்தால் பெண்ணாக உணரும்.   அல்லது பெண்ணாக பிறந்தால் ஆணாக உணரும்.   அதாவது இது போல ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு நிச்சயம் மூன்றாம் பாலினக் குழந்தைகள் தான் பிறக்கும்.

கேரளாவில் இந்த மாதிரி பெண்கள் பெற்றுப் போட்டுள்ள ஆறு லட்சம் குழந்தைகள் தற்போது மூன்றாம் பாலினமாக உள்ளனர்.  மேலும், நல்லொழுக்கத்தைக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தை நல்லொழுக்கத்துடன் இருக்கும்.   ஆனால் தனது பெண்மையை குறைக்கும் பெண்ணுக்கும் ஆண்மையை குறைக்கும் ஆண்களுக்கும் பிறக்கும் குழந்தைகள் கேவலமான ஒழுக்கத்தை கடைபிடிக்கும்.    அப்படிப் பிறக்கும் குழந்தைகளும் மூன்றாம் பாலினமாக மாற வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி, “புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளும் மூளை வளர்ச்சி இன்றி பிறக்கும்.   அல்லது அவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் தாங்கள் ஆணா பெண்ணா என்பதை அறியாமல் மூன்றாம் பாலினமாக மாறுவார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ரஜித் குமாரின் கருத்துக்கள் கேரளாவில் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   ஒரு படித்த பேராசிரியர் இவ்வாறு கருத்து தெரிவித்ததற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.     மாணவர்களுக்கு கல்வி பயில்விக்கும் ஆசிரியருக்கு  ஒரு குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பேராசிரியர் ரஜித் குமாரின் இந்த கருத்துக்கு எதிராக பலர் புகார் மனு அளித்துள்ளனர்.    அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.   அந்த வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் ரஜித் குமாரின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது