ப்ளாரிடா: மார்ச் மாத இறுதியில் நாசா சார்பாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த பெண்கள் மட்டுமே பங்குகொள்ளும் விண்வெளி நடை நிகழ்வு, விண்வெளி உடைகள் பொருந்தாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது.

நாசாவின் வான்வெளி விஞ்ஞானிகளான அன்னி மெக்லெய்ன் மற்றும் கிறிஸ்டினா கோச் என்ற இரண்டு பெண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் விண்வெளி நடை நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது.

விண்வெளி நிலையத்தின் சோலார் அமைப்பிற்குள் சக்திவாய்ந்த லித்தியம் – அயன் பேட்டரியை பொருத்துவதற்காக இந்த நடைநிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விண்வெளி உடைகள் பொருந்தா பிரச்சினையால் அது தற்போது கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது முதல், இதுவரை 214 விண்வெளி நடை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் ஆண்கள் பங்குகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி