சென்னை: இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும், திப்புசுல்தான் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பிரிட்டனில் கொள்ளை லாபத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

கடந்த 1799ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்தார் திப்பு சுல்தான். அதன்பிறகு, அவருடைய சில பொருட்கள், பிரிட்டன் ராணுவ அதிகாரி தாமஸ் ஹார்ட் என்பவரால் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

4 வாட்கள், ஒரு கேடயம், வெற்றிலைப் பெட்டி மற்றும் தங்க முத்திரை மோதிரம் போன்றவை கொள்ளை லாபத்திற்கு ஏலத்தில் விடப்பட்டன. இந்தப் பொருட்கள் இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக எடுத்துச் செல்லப்பட்டவையா? என்ற கேள்விக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.

இந்தியா சார்பில் இந்த ஏலம் தொடர்பாக முறையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டும், அது கண்டுகொள்ளப்படவில்லை. இந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் பிரிட்டனின் பெர்க்ஷைர் நகரில், ஒரு சாதாரண வீட்டின் பரண்மேல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

– மதுரை மாயாண்டி