புதுடெல்லி: மூன்று வயதில் தன் பெயரோடு கேப்டன் என்ற பட்டத்தையும் சேர்த்து சொன்ன ரோஹன் பாஸின், உண்மையிலேயே தான் பயணம் செய்த விமானத்தின் கேப்டனாக இருப்பதை பார்த்த ஆசிரியை எப்படி உணர்ந்திருப்பார்..!

ஆம், அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. சுதா சத்யன் என்ற ப்ளே ஸ்கூல் ஆசிரியையிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பாக 3 வயது நிரம்பிய ரோஹன் பாஸின் வந்து சேர்ந்தான். அப்போது அவனின் பெயரைக் கேட்டபோதுதான் ‘கேப்டன்’ என்ற பதவியையும் பெயரோடு சேர்த்து சொன்னான்.

ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து, டெல்லி விமான நிலையத்தில், அமெரிக்காவின் சிகாகோ செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னர், கேப்டனின் பெயர் அறிவிக்கப்படுகிறது. ஆம், அந்தப் பெயர் ரோஹன் பாஸன்.

உடனே, 30 ஆண்டுகளுக்குப் பிந்தைய நினைவலைகளில் மூழ்கத் தொடங்கினார் சுதா சத்யன். விமானப் பணிப் பெண்ணிடம் கேப்டனை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தார்.

தன்னை சந்திக்க வந்த அதே ரோஹனை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். ரோஹனின் குடும்பமே விமானத் துறையில் தொடர்புடைய குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி