வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல் சேரும் சகதியுமாக காணப்படும் சாலையில் அந்த பகுதி பெண்கள் நாற்று நட்டு நூதன போரட்டம் நடத்தினர். இது அம்மாவட்ட ஆட்சியாயர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும் கூட்ரோடு பகுதியில் பாலம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த பகுதியில் வாகனம் செல்லும் பாதைகள் கடுமையாக சேதம் அடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது செய்த மழை காரணமாக, அந்த சாலை முழுவதும், சேரும் சகதியும் உள்ளது. எனவே, இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத அளவுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், அதிருப்தி அடைந்த அந்த பகுதி மக்கள், தங்கள் வீட்டு பெண்களைக்கொண்டு, சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சேரும் சகதியுமாக இருந்த சாலையில், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. ஆட்சியாளர்களின் மெத்தனம் காரணமாக, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.