மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை:
பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் இராஜீவ் காந்தி.
இராஜீவ் காந்தி முதன்முதலில் பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில்(நகர்பாலிகா) மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மே 1989-இல் அறிமுகப்படுத்தினார். இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் செப்டம்பர் 1989-இல் ராஜ்யசபாவில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பின்னர், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஏப்ரல் 1993-இல் பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி (நகர்பாலிகா) பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்தினார். இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாகின.
இராஜீவ் காந்தி முதன்முதலாக கொண்டு வந்த பெண்களுகான உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு மூலம், இன்று நாட்டில் 15 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
செப்டம்பர் 1996இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச். டி. தேவகவுடாவின் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதா முதன்முதலில் 81வது சட்டத்திருத்த மசோதாவாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.இந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 1996 இல் சமர்ப்பித்தது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெறுவதற்கு முன்பே மக்களவை கலைக்கப்பட்டு மசோதா ரத்து செய்யப்பட்டது.
1998 ஜுலை 13 ஆம் நாள் 12 ஆம் மக்களவையில் சட்ட அமைச்சர் எம். தம்பிதுரை நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தாக்கல்செய்த போது, ராஷ்ட்ரிய ஜனதாதள உறுப்பினர் சுரேந்திரபிரசாத் யாதவ் மசோதாவைக் கிழித்தெறிந்தார்.
1999 ஆம் ஆண்டு 13 ஆம் மக்களவையிலும் எதிர்க்கட்சியினரின் அமளியால் இம்மசோதா நிறைவேறவில்லை.
2003 ஆம் ஆண்டு இருமுறை இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் இதே நிலைதான் நீடித்தது.
2005 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் உமாபாரதி உட்பட சிலரின் எதிர்ப்பால் அப்போதும் வழிஇல்லாமல் போயிற்று.
2008 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ராஜ்யசபாவில் மசோதாவை அறிமுகப்படுத்தியது, அது 186 க்கு 1 என்ற வாக்குகளில் 9 மார்ச் 2010 அன்று நிறைவேற்றப்பட்டது.ஆனால் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படும் பட்டியலில் இந்த மசோதா ஒருபோதும் எடுக்கப்படவில்லை, மேலும் 15 வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், இந்த மசோதாவும் காலாவதியானது.
அப்போது லாலு பிரசாத் யாதவின் RJD, JDU (Janata Dal United) மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை இந்த மசோதாவை பிரதானமாக எதிர்த்தன.
2009 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இம்மசோதாவை நிறைவேற்றப் பரிந்துரை செய்திருந்தது. 2010 பிப்ரவரி 25இல் இம்மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அப்போது ஜே.டி.யு தலைவர் ஷரத் யாதவ் கேட்ட கேள்வி மிகவும் பிரபலமான பேசுபொருளானது. கிராமங்களில் வாழும் எங்கள் மகளிரை இங்கே இருக்கும் உயர் சாதிப் பெண்கள் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்தமுடியும் என அவர் கேட்டிருந்தார்.
1952ல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இது காலப்போக்கில் ஏற்ற இறக்கத்துடனே தொடர்ந்தது. ஆனால் மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கோரிக்கைக்கான தொடக்கப் புள்ளி :
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலும் பெண்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் 1931 இல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமருக்கு புதிய அரசியலமைப்பில் பெண்களின் நிலை குறித்து கடிதம் எழுதினர்.
அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினையும் வந்தது. ஆனால் இது பற்றிய விவாதம் தேவையற்றது என்று தவிர்க்கப்பட்டது.
பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு தொடங்கி வைத்த கோரிக்கை இந்திய விடுதலைப் பெற்ற பின்னரும் கூட பெண்கள் அரசியலில் ஆண்களுக்கு இணையான சம வாய்ப்பு பெறும் நிலையில் இல்லை என்பதை மக்களவையில் உள்ள பெண்களின் மொத்த எண்ணிக்கையில் பெரிய மாற்றம் நிகழவில்லை என்பது உறுதி செய்கிறது.
1952-ல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இது காலப்போக்கில் ஏற்ற இறக்கத்துடனே தொடர்ந்தது. ஆனால் மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை.
1974 ஆம் ஆண்டு, மத்திய கல்வி மற்றும் சமூகநலத்துறை அமைச்சகத்திடம், பெண்கள் நிலைகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில், முதன் முதலாக நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தில் 73,74 ஆம் சட்டத்திருத்தங்கள் மூலம் ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையும் உருவானது.
பின்னர் 81 வது அரசமைப்புத் திருத்த மசோதாவாக முதன்முதலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா செப்டம்பர் 12 ஆம் நாள் 1996 ஆம் ஆண்டு, 11 ஆம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது
2023 செப்டம்பர் 19 ஆம் நாள் இல், மசோதா இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக மொத்தம் 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் 33% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா(நாரி சக்தி வந்தன்) 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் நாளில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்
தற்போதைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்:
தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று உள்ளது . அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை அல்லது மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு போன்ற தென்மாநில மக்கள் வஞ்சிக்கப்படும் ஆபத்து இருப்பதாக தென்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் கருதுகின்றனர்.
இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் நடைமுறைக்கு வராது.
2021ம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படமாலேயே உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 அல்லது 2028ல் தான் நடைபெறும் என வெறும் தகவலாக சொல்லப்படுகிறது.இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் சூழல் உள்ளது.
இந்த மசோதா மறைந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கேட்டது போல், அனைத்து தர பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்குமா அல்லது ஆதிக்க சமூகங்களின் பெண்களுக்கு மட்டுமானதாக இருக்குமா ? என்ற கேள்வி நம்மை சிந்திக்க செய்கிறது. இதில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட , கிராமப்புற பெண்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி உறுதி செய்வது என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. இந்த மசோதா தற்போதைய வடிவில் அரசியல் சாசனம் உறுதி செய்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்லது கருத்தில் கொள்ளாமல் கொண்டுவரப்பட்ட அவசர மசோதாவாகத்தான் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், அடுத்துவரும் அரசில் இந்த சட்ட மசோதா திருத்தப்பட்டு பெண்கள் இடஒதுக்கீடோடு சமூக உள் ஒதுக்கீடுகளும் இருக்கும் என்று உறுதி செய்துள்ளார். இந்த மாற்றம் திரு ராஜீவ் காந்தி கண்ட கனவை மெய்ப்பிக்கும். அதுவரை நம்மில் சரிபாதி சமூகமான பெண்களுக்கான அதிகார பகிர்வு எட்டாத நெல்லிக்காயாக தான் இருக்கும்.
கட்டுரையாளர்: தாமரைச்செல்வன், Everest Minds