ராமேஸ்வரம்

லங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை அவர்களைத் தாக்கி சிறை பிடிப்பதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் செல்ல 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறையிடம் இருந்து அனுமதி டோக்கன் பெற்றிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றன. கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்திக் கண்காணிப்பது தெரியவந்தது.

கரையில் இருந்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.  எனவே 300 படகுகள் செல்ல வேண்டிய நிலையில் 50 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு தரப்பினர் இந்தியக் கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி விரட்டியடித்தனர். அத்துடன் படகுகளில் இறங்கிய கடற்படை வீரர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடிப்போம் என இலங்கை கடற்படை எச்சரித்தால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரத்திற்குத் திரும்பி உள்ளனர்.