விழுப்புரம்,
விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றவருக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் உடந்தையாகச் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையை சேர்ந்த பெண் அதிகாரியின் இந்த செயல் வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது.
விழுப்புரத்தில் வசிக்கும் செல்வி என்பவரின் மூன்றாவது மகளான 17 வயதேஆன தேவிகா லட்சுமியை, டி.எடப்பாளையும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் குடும்பத்தினர் பெண் கேட்டு, வந்துள்ளனர்.
ஆனால், தற்போது எனது மகளுக்கு திருமணம் செய்யவில்லை. அவருக்கு 17 வயதுதான் ஆகிறது என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.
ஆனால், பெண் வீட்டாரின் சம்மதமின்றி, வரும் 27ந்தேதி திருமணம் நடைபெறும் என திருமண பத்திரிகை அச்சடித்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் சங்கர் வீட்டார் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதையறிந்த செல்வி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க விழுப்புரம் மகளிர் காவல்நிலையம் சென்றனர்.
விழுப்புரம் மகளிர் காவல்துறை அதிகாரியான தேவி என்பவர் புகார் குறித்து விசாரிக்காமல், மணமகன் வீட்டாருக்கே சாதகமாக பேசி உள்ளார். போலீஸ் அதிகாரியின் பேச்சை, செல்வியின் சகோதரி லாவண்யா ஒத்துக்கொள்ள மறுத்ததால், அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி அவரது தலையில் வீசி அடித்துள்ளார்.
இதனால் லாவண்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லாவண்யா மற்றும் செல்வி குடும்பத்தினர் புகார் மனு கொடுத்தனர்.
அதில், தன்னை தாக்கிய மகளிர் காவல்நிலைய அதிகாரி தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.