மாநில அரசு, விவசாய அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு விவசாயம் தொடர்பான அனைத்து பயிற்சியை வழங்கிப் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்துவருகின்றன.

கிராமப்புற ஆண்கள், மாற்றுத்தொழில் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிடுவதால், கிராமப்புற பெண்கள் வீட்டு நிர்வாகத்துடன் சேர்த்து குடும்பத்தொழிலையும் நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து குடும்பத் தொழில்களான விவசாயம், நெசவு போன்றவற்றை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பினை பெண்கள் இலகுவாகக் கையாள வழிவகைசெய்யும் விதத்தில் அரசு தன்னுடைய கடமையையுணர்ந்து பெண்களுக்குச் சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இதில் பயிர் வளர்ப்பு, நில மற்றும் நீர் மேலாண்மை, நிதி நிர்வாகம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பயிற்சிகளை அரசு நேரிடையாகவும், தனியார் அமைப்புகள் மூலமாகவும் வழங்கி வருகின்றது.
பெண்கள் நிதி மேலாண்மை செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட களஆய்வு முடிவுகள் உற்சாகமளிக்கக் கூடியதாய் உள்ளன. அம்முடிவுகளின்படி, பெண்கள் நிதி மேலாண்மை செய்யும்போது, குழந்தைகளின் படிப்பு, வியாபாரத்தில் முதலீடு, சேமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இது வறுமையை ஒழிக்க வகைசெய்யும்.

மேற்கு குஜராத், அகமதாபாத்திலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாயாபூரைச் சேர்ந்த அருணா காஞ்சர்யா எனும் பெண் விவசாயி, 10 மற்றும் 13 வயதான இரு குழந்தைகளுக்குத் தாயானவர். இங்கு நடந்த பெண்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டதில், இவரது பருத்தி மகசூலை மூன்று மடங்கு அதிகரிக்கவும், விவசாயச் செலவினை குறைக்கவும் பயிற்சி உதவியது என்றார்.
காஞ்சர்யா கூறுகையில், “என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து நான் உழைத்து வருகின்றேன். எனவே என் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என விரும்புகின்றேன். நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல கணவன் என அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்பதே என் கனவு. அவர்களுக்காக உழைப்பதில் கவனமாக இருக்கின்றேன்.

விவசாயத்தில் சாகுபடி பாதிக்கப் பட்டாலும், வறட்சி வந்தாலும், கிராமத்தில் நோய் பரவினாலும் பெண்களின் தீட்டினால் தான் இது ஏற்பட்டது என பெண்களைத் தண்டிக்கும் மூடநம்பிக்கைகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில், சந்தைமயமாக்கல், பெண்களுக்குரிய வாய்ப்பை நல்கி வருகின்றது.

ப்ரைமார்க் எனும் ப்ரிட்டிஷ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் சுய உதவிக்குழு மற்றும் காட்டன்-கனெக்ட் நிறுவனம் 1250 பெண் விவசாயிகளுக்குக் குஜராத் மாநிலம் முழுவதும் பயிற்சி வழங்கியுள்ளது.
இங்குள்ள பெண்கள், எங்கள் கிராமத்து ஆண்களைவிட, எங்களுக்கு விவசாயம் மற்றும் வங்கிப்பயன்பாடு குறித்த அறிவு அதிகமாகவுள்ளது எனப் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

புள்ளிவிவரப்படி, இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்குப் பெண்கள் ஆவர். ஆனால், வெறும் 13% நிலங்களுக்குத் தான் பெண்கள் உரிமையாளர்களாய் உள்ளனர்.

காஞ்சர்யாவின் கணவர் ஈஸ்வர் (வயது 38), “என் மனைவியை பயிற்சிவகுப்பிற்கு அனுப்பியதில் இருந்து எங்கள் வருமானம் பெருகியுள்ளது. எங்கள் லாபத்தின் மூலம் இருசக்கரவாகனம், கைப்பேசி, தொலைக்காட்சிப்பெட்டி, கான்கிரிட் வீடு என வாங்க முடிந்துள்ளது. நான் அரசு வேலை பார்த்தாலும், விவசாயத்தில் என் மனைவி தான் நிர்வாகி. ஒரு முதலாளியாய் அவர் சொல்வதை நான் பின்பற்றி விவசாயம் செய்துவருகின்றேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை” என்றார் பூரிப்புடன்.

2015ல் ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புக்கொண்டபடி, 2030க்குள் கிராமப்புற பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்கும் குறிக்கோளினை அடைந்துவிட அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. பெண்களும் ஊக்கத்துடன் பங்கேற்று வருவது, பெண்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கின்றது என்பதை நமக்குணர்த்துகின்றது.