மீஞ்சூர்

சென்னையை அடுத்த மீஞ்சூரில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கொலை செய்த பெண் தற்காப்புக் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீஞ்சூரில் ஒரு 21 வயதுப் பெண் ஒரு மீன் பண்ணையில் பணி புரிந்து வந்தார்.  அவர் பணி புரியும் போது அங்குச் சுற்றுக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.   யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை தனி இடத்துக்கு பலவந்தமாக இழுத்துச் சென்று பலாத்கார முயற்சி செய்துள்ளார்.

பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அந்தப் பெண் கீழே தள்ளி விட்டுள்ளார்.  அதனால் அங்கிருந்த கல்லின் மீது அவர் விழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்துள்ளார்.   மயங்கிய அந்த நபரை அப்பெண் இழுத்துக் கொண்டு வந்து சாலையில் போட்டுள்ளார்.  அந்த பெண்ணின் கணவர் அதே பண்ணையில் பணி புரிகிறார்.

அந்த பெண் கணவரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்துள்ளார். கணவரும் மற்ற தொழிலாளர்களும் அங்குச் சென்றுள்ளனர்.  அத்துடன் அந்த கிராமத்தினர் சிலரும் அங்குக் கூடி உள்ளனர்.  அவர்களில் ஒருவர் மீஞ்சூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.   காவல்துறையினர் உடனடியாக ஆம்புலன்சை அழைத்துள்ளனர்.

ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் அடிபட்ட நபர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்த மரணத்தைச் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சடலத்தைப் பொன்னேர் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   அந்த நபர் குறித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை.

தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற நபரைத் தற்காப்புக்காகத் தள்ளிய போது கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளதாக ஊகிக்கப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில்  அந்த பெண்ணின் மீது தற்காப்புக்காக நடந்த கொலை  என்னும் பிரிவில் வழக்குப் பதியப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.