மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தனியார் மற்றும் பொதுத்துறையின் 23 சிறு மருத்துவமனை, நடுத்தர மற்றும் பெரிய மருத்துவமனைகள் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

 

மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘தேசிய புற்றுநோய் கட்டமைப்பு’ எனும் இந்த மருத்துவமனை கூட்டமைப்பில் முக்கிய நகரங்களில் உள்ள 9 கேன்சர் மருத்துவமனைகளும் பிற நகரங்களில் உள்ள 14 மருத்துவமனைகளும் இடம்பெற்றுள்ளது.

40க்கும் மேற்பட்ட மருந்துகளை வாங்க விலை நிர்ணய குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு வரும் இந்த கூட்டமைப்பு மூலம் மருந்துகள் வாங்கியதில் ரூ. 13.2 பில்லியன் (ரூ. 1,320 கோடி) சேமிக்கப்பட்டதாக 2023ல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் மருந்துகளைத் தவிர, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், ஆண்டிமெடிக்ஸ் மற்றும் வளர்ச்சி காரணிகள் உள்ளிட்ட மருந்துகளை சந்தையில் சில்லறையில் விற்கப்படும் அதிகபட்ச விலையில் இருந்து 23% முதல் 99% வரை குறைவாக வாங்கியதன் மூலம் சராசரியாக 82% சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்திடமிருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசியை நேரடியாக வாங்கியபோது இருந்த விலையை விட மத்திய அரசு அதை மொத்தமாக கொள்முதல் செய்தபோது ஒரு டோஸுக்கு ரூ. 150 என்று மிகக் குறைந்த விலையில் கிடைத்தது.

இதனை கருத்தில் கொண்டு கேன்சர் மருந்துகளை வாங்க தனியார் மருத்துவமனைகள் முதல்முறையாக இதுபோன்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிர்காக்கும் மருந்துகளை மொத்தமாக வாங்குவதன் மூலம் மருந்துகளின் விலை பெருமளவு குறைவதோடு நோயாளிகளுக்கும் இதன் பலன் சென்றடையும் என்பதை உணர்ந்த தமிழநாடு அரசு 1995ம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளுக்கான மருந்து கொள்முதலை ஒருமுகப்படுத்திய நிலையில் இதன் செயல்பாட்டை அறிந்த மற்ற மாநிலங்களும் இதனை செயல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தேசிய புற்றுநோய் கட்டமைப்பின் இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றுள்ளதை அடுத்து இந்த கூட்டமைப்பில் இணைய மேலும் சில மருத்துவமனைகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.