விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க மத்திய அரசுக்கு 8 வார கால அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, வாகனத்தால் ஒருவரை மோதிவிட்டு தப்பியோடிய நிலையில் விபத்துக்குள்ளானவர் பலியானால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். அதேசமயம் பலத்த காயம் அடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஹிட் அண்ட் ரன் வழக்குகளின் தரவு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. ஹிட் அண்ட் ரன் வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. கடந்த ஆண்டு சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் இந்தத் தகவலை மக்களவையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பியோடும் வழக்குகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.