சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் குடை மூலம் சமூக விலகல் கடைபிடிக்கப் பட்டதுபோல, தமிழகத்திலும் குடை நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்துமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இதற்கு காரணம் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காதுதான் காரணம் என்று, தமிழக முதல்வர் உள்பட மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊரடங்கு நாட்களின்போது, அத்தியாவசியத் தேவைக்கு வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் குடை பிடித்து வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பலர், கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடை பிடித்துக்கொண்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்கிச் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருகினற்னர்.
தற்போது ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இந்த நடைமுறையை சிலர் பின்பற்றத் தொடங்கி உள்ள நிலையில், சேலம் ஆட்சியர் S.A.ராமன், சேலத்தில் உள்ள மக்களை சமூக தூரத்தை பராமரிக்க வீடுகளில் இருந்து வெளியே வரும்போது ஒரு குடை பயன்படுத்துவதில் கேரள மக்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில் சென்னை உள்டபட தமிழகம் முழுவதும் குடை பிடிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
தமிழகத்தில் இன்னும் ஒருசில நாளில் அக்னி வெயில் கொளுத்த உள்ள நிலையில், தமிழகஅரசு குடைபிடிக்கும் நடைமுறைக்கு உத்தரவிட்டால், அது மக்களுக்கு இரண்டு வகையிலும் பயன் அளிக்குமே… தமிழக அரசு யோசிக்குமா….