ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், அங்கு இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பயங்கரமான தாக்குதலில் ஈடுபட பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு பாகிஸ்தான் மற்றும் அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,  இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான,  ஐநா சபை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடம் கோரிக்கை வைத்த நிலையில், இது உள்நாட்டு விவகாரம், இதில் தலையிட முடியாது என பல நாடுகள் மறுப்பு தெரிவித்து விட்டன.

இந்த நிலையில், பாகிஸ்தான் தனது நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மூலம் காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மூலம் காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளது.

இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி,  காஷ்மீரின் உதாம்பூர், பூஞ்ச் ஆகிய மாவட்டங் களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து,  பெருந்திரளாக மக்கள் சந்தைகளில் திரண்டனர். ஆடைகள் உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான பொருட்களை அவர்கள் வாங்கிச் சென்றனர். ஒரு வார காலத்திற்குப் பின்னர் முழு அளவில் சந்தையில் வியாபாரம் களைகட்டியது.

தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உபயோகத்திற்காக 300 இடங்களில் பொது தொலைபேசி பூத்துகள் நிறுவப்பட்டுள்ளன.

கோதுமை, அரிசி,மண் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 35 முதல் 65 நாட்கள் வரை தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மாநில அரசின் உணவுப்பொருள் நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (பக்ரீத்) மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்,  இதற்காக ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப் படையை சேர்ந்த 7 பேர் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயற்சிப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில். ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய உலகமே  காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,  ஸ்ரீநகரில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வீதிகளில் நடமாடிய மக்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டடனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும், எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக் இந்திய ராணுவம் எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு தவறான நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும்,  காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்தால் அதற்குரிய பதிலடியை அது சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள ஆளுநர், எல்லையளவு இந்த பிரச்சினை நின்றுவிடாது என்றும் பாகிஸ்தானின் உள்ளேயே போய்  தக்க பாடம் புகட்டுவோம்  என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.