மும்பை:

துபாயில் மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பை வர வாய்ப்புள்ளது என்றும்,  அவரது மரணத்தில் உள்ள மர்மம் காரணமாக விசாரணை மேலும் தொடர்ந்தால் உடல் மும்பை வர மேலும் தாமதாமாகும் என்று இருவேறு தகவல்கள் பரவியுள்ளன.

பிரபல நடிகை ஸ்ரீதேவி திருமண விழா ஒன்றில்  கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியின் உடல், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அவர் தங்கியிருந்த விடுதி  அறையின், குளியறையில் இருந்த குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அப்போது  மிக அதிகமான குடிபோதையில் இருந்துள்ளார் என்றும்  பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணை துபாய் காவல்துறையிடம் இருந்து சட்டதுறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கு விசாரணை முடிந்து. இந்திய நேரப்படி பிற்பகலில் ஸ்ரீதேவியின் உடலை எடுத்து செல்ல அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு எடுத்து வரப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வர அம்பானியின் விமானம் ஏற்கனவே துபாய்க்கு சென்று காத்திருக்கிறது.

இதற்கிடையில் துபாய் அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகத்தை எழுப்ப போவதாகவும், போனி கபூரை விசாரிக்க உத்தரவிட கோரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போனி கபூர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர மேலூம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.